Published : 14 May 2021 03:13 AM
Last Updated : 14 May 2021 03:13 AM
திருநெல்வேலியில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 புதிய மையங்கள் மற்றும் தூத்துக்குடியில் 2 சித்த மருத்துவ மையங்கள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும், ஆய்வு செய்யவும் அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்துக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அவர்கள் ஆய்வு மேற் கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றஆய்வு கூட்டத்தில் அமைச்சர்களுடன், தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு, சா.ஞானதிரவியம் எம்.பி., அப்துல்வகாப் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கண்காணிப்பு அலுவலர் அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஹைகிரவுண்ட் காந்திமதி பள்ளியில் 50 படுக்கைகள், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் 200 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா மையங்களை தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்.பி., மற்றும் தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை கரோனா சிகிச்சை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து தினமும்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 100 பேருக்கு உணவு வழங்கும் பணியை எம்பி மற்றும் அமைச்சர் தொடங்கி வைத்தனர்.
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்த னார் பொறியியல் கல்லூரி , தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ மையத்தை கனி மொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் கரோனா முதல் கட்ட நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT