Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிதமான கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டத்தில் 5 இடங்களில் 2,800 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
கரோனா 2-வது அலை மிகப் பெரிய அளவில் மக்களை தாக்கிவருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி தொற்று 2,000-ஐ கடந்து விட்டது. இந்நிலையில் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையையே பெரிதும் நாடி வருகின்றனர். அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் இங்கு வருகின்றனர். இதனால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது.
இதைத் தவிர்க்க வட்டார அளவில் கரோனா சிறப்பு மருத்துவமனைகளை, குறைந்தபட்சம் 100 படுக்கை வசதிகளுடன், ஆக்சிஜன் செலுத்தும் வசதியுடன் ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர். காட்டாங்கொளத்தூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் கரோனா சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை இருந்து வந்தது.
இதனையடுத்து கரோனா பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், மிதமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு 2,800 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம்தொடங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தொடங்கப்படுகிறது. குறிப்பாக சேலையூர், பொத்தேரி, மேலக்கோட்டையூர், மாமண்டூர், தையூர் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் கூறியதாவது:
மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு முறையாக சிகிச்சைஅளிக்கவும், அரசு மருத்துவமனைகளில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே மாவட்டத்தில் தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 200 மற்றும் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல் மாவட்டம் முழுவதும் வட்டார அரசு மருத்துவமனைகளில் 173 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி மிதமான கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு என 2,800 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும். எனவே பொதுமக்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஊரடங்கு தினங்களில் வெளியே வராமல் அரசு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT