Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறை கண்மாய் கரையில் கி.பி. 16-17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரே கல்லில் 4 அரிய சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்லப்பாண்டியன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் தர், செல்வம், மாரீஸ்வரன் ஆகியோர் இந்த அரிய சிற்பத்தை கண்டெடுத்தனர். இச்சிற்பம் குறித்து பேராசிரியர் செல்லப்பாண்டியன் கூறியதாவது: இச்சிற்பம் ஒரே கல்லால் ஆனது. முன்பக்கத்தில் ஆஞ்சநேயர் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் தோளில் பொருட்களை சுமந்து செல்வது போலவும், மேலே இரண்டு பக்கமும் சூரியனும், சந்திரனும் காட்டப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் உருவத்துக்கு மேலே விநாயகர் சிற்பம் உள்ளது. எனவே இது ஒரு வணிகச் சின்னமாக இருக்கலாம். மேலும், இச்சிற்பத்தின் வலது பக்கத்தில் திரிசூலம் உள்ளது ஒரு கல்லில் திரிசூலம் செதுக்கப்படுவது சிவன் கோயிலுக்கு தானம் அளிப்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
எனவே, இந்த சிற்பம் முன்பு இப்பகுதியில் இருந்த சிவன் கோயிலுக்கு தானமாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பதாக இருக்கலாம்.
தமிழகத்தில் இதுபோன்ற சிற்பம் இதுவரை கண்டறியப்படவில்லை என தொல்லியல் அறிஞர்கள் கருதுவதால் இந்த அரியசிற்பத்தை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்வதன் மூலம் புதிய வரலாற்று தகவல்களை நாம் அறிய முடியும் என்றார்.
இச்சிற்பம் குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் ஆய்வாளர் செல்வம் கூறியதாவது: இந்த ஒற்றைக்கல் சிற்பத்தின் பின்பகுதியில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் படிக்க இயலாத சிதைந்த நிலையில் உள்ளது. இக்கல்வெட்டில் இவ்வூரின் பெயர், கண்மாய் மற்றும் மடை பற்றிய எழுத்துகள் உள்ளன. எனவே இது மடை அல்லது கோயிலுக்கு நிலம் தானம் குறித்த செய்தியை தருவதாக இருக்கலாம்.
மேலும், இடது பக்கத்தில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த வீரன் சிற்பமும் உள்ளது. சருகு கொண்டை உடைவாளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் இந்த வீரன் உள்ளான். இந்த வீரன் இப்பகுதியின் தலைவனாக கல்வெட்டில் அறியபடக்கூடிய முத்தப்ப நாயக்கராக இருக்கலாம். மேலும், இந்த வீரனே இந்த தானத்தை வழங்கியவனாகவும் இருக்கலாம் என்றும் அறிய முடிகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT