Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் - கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கைகள் : மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 200 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் குமார் ஜெயந்த் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கரோனா உதவி மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து திரவ ஆக்சிஜன் சேமித்து வைக்கும் கொள்கலன் பகுதியை பார்வையிட்டு மருத்துவ அலுவலர்களிடம் ஆக்சிஜன் இருப்பு குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கரோனா நோயாளிகள் வகைப்படுத்தும் மையத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு சார்பில் தினசரி 3,000 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் 1000 பரிசோதனைகள் தினசரி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது 4000-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் அதிக பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மூலம்தான் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. கூடுதலாக 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் தேவையான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. மேலும் தேவையெனில் உடனடியாக வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாவலன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x