Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் - ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைக்க ஏற்பாடு : சிறப்பு கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா. அருகில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் உள்ளிட்டோர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயரும் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக சிறப்பு கண்காணிப்பு அலுவ லராக லட்சுமிபிரியா செயல்பட்டு வருகிறார். தற்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் படுக்கை வசதிகள் குறைவாக இருப்பது, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். இரண்டாவது நாளாக வாலாஜா அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லட்சுமி பிரியா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்ப ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்தி ரன், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், கண்காணிப்பு அலுவலர் பேசும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் கட்டுப்படுத்த முடியும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களிலும் வீட்டிலும் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள், பரிசோதனை முகாம்களை அதிகரிக்க வேண்டும்.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினசரி கண் காணிக்க வேண்டும். தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும். இதனை அனைத்துத் துறை அதிகாரிகள் இணைந்து செயல் படுத்த வேண்டும். வரும் நாட்களில் கரோனா தொற்றின் எண்ணிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x