Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நான்காவது முறையாக அமைச்சராகும் நிலையில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள நீர்வளத் துறையின் அமைச்சராக பதவியேற்கும் முதல் நபராக உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் 10-வது முறையாக போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள் ளார். திமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
தமிழகத்தில் நீண்ட காலம் பொதுப்பணித்துறை பதவியில்அனுபவம் மிக்கவர் என்பதால் அவர் மீண்டும் பொதுப் பணித்துறை அமைச்சராவாரா? அல்லது வேறு ஏதாவது ஒரு துறை வழங்கப்படுமா? என்ற கேள்வி இருந்தது.
இந்நிலையில், திமுக அமைச்சரவை பட்டியல் நேற்று மாலை வெளியான நிலையில் அதில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் உள்ள துரைமுருகனுக்கு பொதுப் பணித்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு சிறுபாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் (நீர்வளத் துறை), மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங் கள் மற்றும் சுரங்கங்கள் துறை முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் தமிழகத்தின் முதல் நீர்வளத் துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்க உள்ளார். இவர் ஏற்கெனவே, பொதுப்பணித்துறையின் அமைச்சராக 1989-91-ம் ஆண்டு வரையும், 1996-2001 வரையும், 2006-2009 வரையும் இருந்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி வசம் இருந்தது. 2009-2011 வரை துரைமுருகன் சட்டத்துறை அமைச்சராக இருந்தார்.
இது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மட்டும்தான் பொதுப்பணித் துறையின் கீழ் நீர்பாசன திட்டங்கள் இருந்தது. அதை பிரிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அண்டை மாநிலங்களில் நீர்வளத் துறை தனியாக உள்ளது.
இந்தமுறை பொதுப்பணித் துறையில் இருந்து அது பிரிக்கப்பட்டு அத்துறையில் அனுபவம் மிக்கவரிடம் தனியாக வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அத்துறையின் முதல் அமைச்சராக அவர் பொறுப்பேற்பது எங்களுக்கு பெருமைதான்’’ என தெரிவித்தனர்.
முதல் முறையாக அமைச்சர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலினின் நீண்ட நாள் ஆதரவாளரான சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.காந்தி, கைத்தறி துறை அமைச்சராக முதல் முறையாக இன்று பொறுப்பேற்க உள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT