Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
பெரம்பலூர் அருகே நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து, விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் டோக்கன் முறையில் நாள் ஒன்றுக்கு 300 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கொள்முதல் நிலையத்துக்கு பூலாம்பாடி, கடம்பூர், கள்ளபட்டி, பெரியம்மாபாளையம், வெங்கலம், உடும்பியம் உட்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக விவசாயிகளை புறக்கணித்து, வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் நெல்லை கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து உயர் அலுவலர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மேலும், விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்கு குறைந்தபட்சம் 25 நாட்கள் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் நேற்று நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். மேலும், நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் மற்றும் வேளாண்மை துறையினர் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறைகேடுகளில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, 3 மணி நேரமாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் கைவிடப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT