Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM
தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி முடித் திருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என வந்தவாசி வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் தமிழ் நாடு மருத்துவர் சவர தொழி லாளர்கள் நல சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு, திரையரங்கம், உடற் பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானம், சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் மூடல், கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு போன்ற கட்டுப்பாடுகள் கடந்த 26-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
இதில் முடித் திருத்தும் கடைகளும் மூட வேண்டும் என்ற உத்தரவு இடம்பெற்றுள்ளது. இத னால், இந்த தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், கரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் வகையில், முடித்திருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மனு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவர் சவர தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் வந்தவாசி நகர முடித் திருத்துவோர் நல சங்கத் தலைவர் கோபி சங்கர் தலைமையில் வந்தவாசி வட்டாட்சி யர் திருநாவுக்கரசு மற்றும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) உஷா ராணி ஆகியோரிடம் நேற்று அளித்துள்ள மனுவில், “வந்தவாசி நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட முடித் திருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் இயங்கி வருகின்றன. கரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 25-ம் தேதியில் இருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால், இந்த தொழிலை நம்பி உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடை வாடகை, மின்சார கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. கடந்தாண்டு, ஊரடங்கு விதிக்கப்பட்டபோது பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். இந்த நிலை தொடர்ந்தால், தொழிலாளர்களின் குடும்பங்கள் உணவுக்கு கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுவிடும். எங்களது குடும்பங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி கடைகளை திறந்து, வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள் கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT