Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களின் முகவர்களுக்கு நாளை (ஏப். 29) கரோனா தொற்று சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் என 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் மொத்தம் 113 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கையின்போது அனுமதிக்கப்படும் முகவர்களுக்கான அடையாள அட்டை, அனுமதி கடிதம் உள்ளிட்டவற்றை வழங்கும் பணி நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மேசைகளுக்கும் வேட்பாளர் ஒருவருக்கு ஒரு முகவர் என அனுமதிக்கப்படுவர். சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 28 மேசைகளின் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. எனவே மொத்தம் 1,894 வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக, வேட்பாளர் முகவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நாளை (ஏப். 29) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் முகவர்கள் அனைவருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தப் பரிசோதனையில் முகவர்களுக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டால் அவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் அனுமதிக்கப்படுவார்.
ஆனால், அவரும் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த சிறப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை வருவாய் துறையினரும் சுகாதாரத் துறையினரும் செய்து வருகின்றனர்.
பரிசோதனையில் முகவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT