Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

2 தொழிலாளர்கள் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை :

ஈரோடு

கோபி அருகே பிஹார் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையத் தைச் சேர்ந்தவர் ரமேஷ் (36). விசைத்தறி பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த நவீன்குமார் (26), சுதேந்திரகுமார் வர்மா (28), ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரக்குமார் (21) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நவீன்குமார் மற்றும் சுதேந்திரக்குமார் ஆகியோரை ரவீந்திரக்குமார் இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனர். இருவரது உடலையும் அங்குள்ள கிடங்கில் ரவீந்திரக்குமார் மறைக்கவும் முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரவீந்திரக்குமாரைக் கைது செய்தனர். கோபியில் உள்ள ஈரோடு மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரவீந்திரக்குமாருக்கு கொலைக்குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், கொலையை மறைத்ததற்காக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x