Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 4,309 பேருக்கு கரோனா தடுப்பூசி :

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 4,309 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்றைய கரோனா பாதிப்பு 414 ஆக இருந்த நிலையில், 233 பேர் குணமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 2452 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமினை ஈரோடு மண்டல பொது மேலாளர் கணபதி தொடங்கி வைத்தார். கிளை மேலாளர்கள் அர்ஜுனன், நல்லசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு மாநகர பகுதியில் கரோனா தொற்றினைக் கண்டறியும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:

மாநகராட்சி சார்பில் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முகாமிட்டு அந்த தெருவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, 7 நடமாடும் கரோனா பரிசோதனை வாகன இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பரிசோதனைகள் அதிகரிப்பதால், தொற்று அதிகரித்து வருகிறது. நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடிகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், என்றார்.

ஈரோடு மாநகராட்சி இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு ஓட்டல் மற்றும் மூன்று டீ கடைகளுக்கு தலா ரூ.5000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ஒரு டாஸ்மாக் கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்றைய பாதிப்பு

மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள தகவல்படி நேற்று முன்தினம் ஒரு நாளில் மாவட்டம் முழுவதும் 4,309 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சராசரியாக இரண்டு நாளில் தலா 4000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 414 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 233 பேர் குணமடைந்துள்ளனர். 78 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x