Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம்,செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்காக வெளியூர்களிலிருந்து வந்திருந்த சாதுக்கள், குறி சொல்பவர்கள், யாசகர்கள் பலர் உணவின்றி தவித்தனர். இவர்கள் கோயில் சத்திரத்தில் தங்கியிருந்து, அங்கு நடைபெறும் அன்னதானத்தில் வழங்கப்படும் உணவை உட்கொண்டு வருவது வழக்கம்.
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோயிலில் அன்னதானம் நடைபெறவில்லை. இதனால், இவர்கள் அனைவரும் உணவின்றி தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த நாட்டார்மங்கலம் நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர், கோயில் சத்திரத்தில் தங்கியிருந்த அனைவருக்கும், ரொட்டி, பிஸ்கெட், பால், குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். செட்டிகுளம் ஊராட்சித் தலைவர் கலா தங்கராசு, விக்னேஷ், விஜய் அரவிந்த், சவுந்தர்ராஜன், கமலேஷ், கண்ணதாசன், சக்திவேல், முத்துக்குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும், இனிவரும் ஊரடங்கு நாட்களில் கோயில் சத்திரத்தில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் உணவுப் பொருட்களை பொட்டலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT