Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - கூடுதல் விலைக்கு உர மூட்டைகள் விற்பனை? : வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையத்தில் நேற்று ஆய்வு செய்த வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர்.

திருப்பத்தூர்

நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு உர மூட்டைகளை விற்பனை செய்தால் உர விற்பனையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மலை மாவட்ட வேளாண்இணை இயக்குநர் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்ததை தொடர்ந்து மாவட்டத்தில் உழவுப் பணிகளை விவசாயிகள் மேற் கொண்டு வருகின்றனர். விவசாயப் பணிகளுக்கு தேவையான உரங் கள் தடையின்றி கிடைக்க மாவட்ட வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட விவசாயப் பணிகளுக்காக 2,685 மெட்ரிக் டன் யூரியா, 340 மெட்ரிக் டன் டிஏபி, 2,130 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 640 மெட்ரிக் டன் பொட்டாஷியம் ஆகிய உரங்கள் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

உர மூட்டைகளை விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன் படுத்தி உரிய விலை கொடுத்து வாங்கி பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதேநேரத்தில், உர மூட்டைகளை அதிக விலைக்கு விற்பது, இருப்பு இருந்தும், இல்லை என விவசாயிகளை அலைக்கழிப்பது உள்ளிட்ட செயல்களில் உர விற்பனையாளர்கள் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை எச்சரித்திருந்தது.

மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கலாம் என வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உர விற்பனைநிலையங்களில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு உர விற்பனை நிலையங்களிலும் உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை காட்டிலும் அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? விற்பனை யாகும் உரங்களுக்கு உரிய ரசீது வழங்கப்படுகிறதா? விவசாயி களிடம் ஆதார் எண்ணை பெற்று விற்பனை கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை அவர் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, உர விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட உரங்கள் எவ்வளவு? விற்பனையான உரங்கள் போக தற்போது இருப்பு உள்ள உரங்கள் எவ்வளவு? இருப்பு விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.

அப்போது, உர விற்பனையாளர் களிடம் வேளாண் இணை இயக்கு நர் ராஜசேகர் கூறும்போது, ‘‘ஒவ்வொரு உர விற்பனை நிலை யங்களிலும் உரம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் அறிவிப்புப் பலகையில் தினசரி எழுதி வைக்க வேண்டும்.

அனுமதி பெறாத உரங்களை எக்காரணத்தை கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. அதேபோல நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு உர மூட்டைகளை விற்பனை செய்வது, செயற்கை யான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு உரமூட்டைகளை விற்பனை செய்வது தெரியவந்தால் விற்பனையாளர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்க நேரிடும்.

கடந்த 2020-21-ம் ஆண்டு விற்பனையான அதேவிலையில் தான் பொட்டாஷியம், காம்ப்ளக்ஸ், டிஏபி போன்ற உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது. எனவே, அரசு அறிவித்துள்ள விலையில் தான் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அப்போது, வேளாண் உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) அப்துல்ரகுமான், வேளாண் அலுவலர் ஸ்வதிகா ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x