Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM
ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படுவோருக்கு எந்தவித தடையுமின்றி சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பு வைத்தல், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரித்தல், உயிர்காக்கும் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை போதுமான அளவில் வழங்குதல் உட்பட பல்வேறு நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில்,ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடலாம் என்ற தகவலையடுத்து, பதுக்கலை கண்காணிக்க மாவட்டத்தில் சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தவிவகாரத்தில் தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் மருந்து வர்த்தகர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கும்நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது மீறி பதுக்கலில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்குவோர் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 9498181209, 0421-2243324 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT