Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் - தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை : உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு

கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் தரமில்லாத குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கோடைக்கால விற்பனையை குறிவைத்து தரமற்ற குளிர்பானம் விற்பனை செய்வதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக குளிர்பான கடைகள்,சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கம்பங்கூழ், இளநீர், தர்பூசணி, மோர், நுங்கு போன்றவை விற்பனை களைகட்டியுள்ளது. மேலும், குறைந்த விலையில் பலர் குளிர்பானங்களை பாக்கெட்டுகள், பாட்டில்களில் அடைத்து விற்க தொடங்கியுள்ளனர். எந்தவிதிமுறைகளையும் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் இந்தகுளிர்பானங்களை குடிப்பவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் எலுமிச்சை ஜூஸ், கலர் பவுடர் கலந்த குளிர்பானம், மோர், தயிர் போன்றவை பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வருகின்றன. அதில் ஒரு சில தவிர, பெரும்பாலான பாக்கெட்களில் தயாரிப்பு, காலாவதியாகும் தேதி, மூலப்பொருட்கள் உள்ளிட்ட விவரங்கள் இருப்பதில்லை. இதுபோன்ற தரமில்லாத குளிர்பானங்களை அருந்தும் மக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது.

நடவடிக்கை தேவை

இதுகுறித்து, அவ்வப்போதுஆய்வுகொண்டு தரமற்ற குளிர்பானம், குடிநீர் பாக்கெட்களை தடைசெய்யவும் சுகாதாரமற்ற முறையில் இவற்றைத் தயாரிக்கும் குளிர்பான கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகளும், உணவு பாதுகாப்புத் துறையினரும் தீவிரம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புற்றுநோய் அபாயம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தற்போது கரோனாதோற்றால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வரும் வேளையில் தரமற்ற குளிர்பானத்தால்பலர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிக அளவு தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுபோன்ற தரமற்ற சாயப்பவுடர்கள் மூலம் தயாரிக்கப்படும் குளிர்பானங்களால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் குளிர்பான கடைகளில் ஆய்வு நடத்தி போலி குளிர்பானங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x