Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 16 ஆயிரத்து 526 பேர் இது வரை குணமடைந்துள்ள நிலையில், கரோனா பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலான நிலையில், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என அவர் ஆய்வின் போது அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை 18 ஆயிரத்து 900 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று (25-ம் தேதி) 313 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 212 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 21-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 56 வயது பெண், உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப் பட்டவர்களில் 16 ஆயிரத்து 526 பேர் குணமடைந்துள்ளனர். 2220 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 834 படுக்கைகளும், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தற்காலிக கரோனா வைரஸ் தொற்று சிகிச்சை மையங்களில் 2700 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 307 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம், பவானி, ஈங்கூர் விநாயகா நகர், வாய்க்கால்மேடு, சிவகிரி கொடுமுடி சாலை, வீரப்பன்சத்திரம் அசோகபுரம் உள்ளிட்ட 60 இடங்களில் 1114 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 862 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24-ம் தேதி வரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 953 பேர் கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 24 மணிநேரமும் இயங்கும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை 0424-1077, 0424-2260211 என்ற எண்களிலும், 9791788852 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT