Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் - 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் :

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வெட்டப்பட்ட சந்தனமரம். அடுத்த படம்: மர்ம நபர்களால் வெட்டி வீசப்பட்ட சந்தன மரத்தின் ஒரு பகுதி.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 3 சந்தன மரங்களை நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே கேதாண்டப் பட்டியில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் பின் பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. ஆலையில் அரவைப் பணி இல்லாவிட்டாலும் அலுவலக பணியாளர்களும், தொழிலாளர்களும் வந்து செல் கின்றனர்.

இதற்கிடையில், கடந்த 19-ம் தேதி நள்ளிரவு சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதை சர்க்கரை ஆலையின் பாதுகாவலர் லால் பஹதூர் (60) என்பவர் மறு நாள் காலை கண்டறிந்துள்ளார். இது தொடர்பாக திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் சர்க்கரை ஆலை நிர்வாகத் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்ட 3 சந்தன மரங்களின் மதிப்பு ரூ.75 ஆயிரம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாட்றாம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x