Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

அதிமுக கவுன்சிலர் தோட்டத்தில் 11 சந்தன மரம் வெட்டி கடத்தல் : வனத்துறை, போலீஸார் விசாரணை

சேலம்

சேலம் அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தோட்டத்தில் இருந்து 11 சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரவி (48). அதிமுகவைச் சேர்ந்தவர். இவர் சகோதரி ஜெயலட்சுமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில், அரசு அனுமதி பெற்று 76 சந்தன மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தார். தோட்டத்தில் இருந்த 7 சந்தன மரங்களை கடந்த 12-ம் தேதி இரவு மர்ம நபர்கள் வெட்டிச் சென்றனர்.

இதுதொடர்பாக ஆத்தூர் வனச்சரகர் செந்தில்குமார் நேரில் சென்று விசாரணை மேற் கொண்டார். மேலும், ரவி, அவரது சகோதரி ஜெயலட்சுமி மல்லிய கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மீதியுள்ள மரங்களை வனத்துறையினர் வெட்டி எடுத்துக் கொள்ளவும் ரவி வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (22-ம் தேதி) 11 சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டி எடுத்துச் சென்றுள்ளது. இதையறிந்த கவுன்சிலர் ரவி, ஆத்தூர் வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் மல்லியகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் உதவி ஆய்வாளர் மலர்விழி தலைமையிலான போலீஸார் மற்றும் வனத்துறையினர் சந்தன மர தோட்டத்தில் நேரில் சென்று, மரங்களை வெட்டிய மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதை பயன்படுத்தி மர்ம நபர்கள், சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. வனத்துறை மற்றும் போலீஸார் சந்தன மர கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x