Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

குமரியில் ஒரேநாளில் 223 பேருக்கு கரோனா: 4 பேர் மரணம் : நெல்லையில் 494, தூத்துக்குடியில் 371 பேருக்கு பாதிப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் மாநகராட்சியால் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

நாகர்கோவில்/ திருநெல்வேலி/ தூத்துக்குடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா 2-வது அலை வேகமாகபரவி வருகிறது. இதுவரை 19,250-க்கும் மேற்பட்டோர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 24 பேர் மரணமடைந்துள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இம்மாவட்டத்தில் 223 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாகர்கோவில் தலைமைதபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவரை சிகிச்சைக்கு அனுப்பிய சுகாதாரத்துறையினர், அவருடன் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். தபால் நிலையத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட ஊழியர் பணியாற்றிய பிரிவு மூடப்பட்டது. பொருட்கள், பார்சல்கள், கடிதங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் கனரா வங்கி ஊழியருக்கு தொற்று ஏற்பட்டதால், வங்கி மூடப்பட்டது. நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தக்கலையைச் சேர்ந்த பொறியாளர் உட்பட 4 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 494 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,283 ஆக அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 260 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 234 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: அம்பாசமுத்திரம்- 35, மானூர்- 16, நாங்குநேரி- 11, பாளையங்கோட்டை- 56, பாப்பாக்குடி- 4, ராதாபுரம்- 34, வள்ளியூர்- 45, சேரன்மகாதேவி- 25, களக்காடு- 8.

தற்போது மாவட்டத்தில் 3,028 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 227பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 371 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 20,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 189 பேர் உட்பட இதுவரை 17,426 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 2,464 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனா பாதிப்பால் 146 பேர் இறந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x