Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM
சேலத்தில் பேருந்துகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படுவதை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். அப்போது, அதிக பயணிகளை ஏற்றி வந்த பேருந்து நடத்துநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேலத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் திருமண மண்டபங்கள், பேருந்துகள் ஆகியவற்றில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்த பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி, முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் ஆணையர் அறிவுரை வழங்கினார். மேலும், அப்பகுதியில் உள்ள திருமணமண்டபங்களில் அவர் ஆய்வு செய்தார்
ஆய்வின் போது, இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மற்றும் அரசு, தனியார் பேருந்துகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும், அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி வருவதும் கண்டறியப்பட்டது.
இருக்கையை விட அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்த 3 தனியார் பேருந்துகளுக்கு தலா ரூ. 5 ஆயிரமும், முகக் கவசம் அணியாமல் பயணிகளை ஏற்றி வந்த 4 வாகனங்களுக்கு தலா ரூ. 500, முகக்கவசம் அணியாமல் வந்த 5 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
சேலம் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம், ஏப்ரல் மாதத்தில் இதுவரை முகக் கவசம் அணியாத ஆயிரத்து 75 பேர்களுக்கு தலா ரூ. 200, சமூக இடைவெளியை கடைபிடிக்காத 309 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 500 , 24 வணிக நிறுவனத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், தாதகாப்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமையும், சீலநாயக்கன்பட்டி, ஜி. ஆர். நகரில் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் சண்முகவடிவேல், மருத்துவர்.சன்மதி வெங்கடாஜலம், அம்மாப்பேட்டை எஸ்ஐ ராஜேந்திரன், தெய்வீகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT