Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM
விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் மே 5-ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்ளில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கரும், மறைமுகமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களும் பாசனம் பெற்று வருகின்றன. கசிவுநீர் மூலம் ஏராளமான குளம், குட்டைகளுக்கு நீர் கிடைத்து வருகின்றன.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தல் உட்பட சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.933.10 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சென்னிமலை அருகே நேற்று முன்தினம் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டபோது, விவசாயிகள் போராட்டம் நடத்தி பணியைத் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக ஈரோடு ஆர்டிஓ சைபுதீன் தலைமையில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் நல்லசாமி, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் துளசிமணி ஆகியோர் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசியதாவது:
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், வாய்க்காலை ஒட்டிய நிலத்தடி நீராதாரம், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு போகும். கான்கிரீட் தளம் மற்றும் கரை அமைக்கும்போது, பல்லாயிரம் மரங்கள் வெட்டப்படும். விளை நிலங்கள் பாலைவனம் ஆகும். இதன் காரணமாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்தைக் கைவிட்டார்.
மேலும், கான்கிரீட் தளம் அமைத்தால், வாய்க்காலில் திறக்கப்படும் 2,300 கனஅடி நீர், 1, 800 கனஅடியாக குறைக்கப்படும். கீழ்பவானியில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 24 டி.எம்.சி நீர் தற்போது 19.6 டி.எம்.சி.யாக குறைந்துள்ள நிலையில், கான்கிரீட் தளம் அமைந்தால் விவசாயம் அழியும். பல ஆண்டுகளாக கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு மேற்கொள்ளாமல் விட்டுவிட்டு, தற்போது சீரமைப்பு எனக்கூறி திட்டத்தை செயல்படுத்த முயலக்கூடாது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, புதிய அரசு அமைந்ததும், இத்திட்டத்தை நிறுத்த முறையிடுவோம். அதுவரை கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கூட்டத்தின் நிறைவில் ஈரோடு ஆர்டிஓ சைபுதீன் பேசும்போது, விவசாயிகளின் கருத்தின் அடிப்படையில், மே 5-ம் தேதி வரை இத்திட்டம் தொடர்பாக வாய்க்கால் உள்ள பகுதி, அதனை ஒட்டிய இடங்களில் அளவீடு, முன்னேற்பாடு பணிகள் நடக்காது. பொதுப்பணித்துறையினர், வாய்க்காலுக்குள் வரமாட்டார்கள். அடுத்து அமையவுள்ள அரசின் பரிந்துரைப்படி பணி செயல்படுத்தப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT