Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM
கரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமா, கரோனாபாதுகாப்பு மையத்தில் தங்க வைக்க வேண்டுமா அல்லது வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற அனுமதிப்பதா என்பதை கண்டறியும் வகையில் தனியாக பரிசோதனை மையம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதில்கரோனா தீவிர தொற்று உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். லேசான தொற்று உள்ளவர் மற்றும் இணை நோய்கள் இல்லாதவர்கள் கரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
யாருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை தேவை என்பதை கண்டறிவதற்காக தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனியாக பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூறியதாவது: கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் அனைவரும் இந்த மையத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்களுக்கு அரசு மருத்துவமனை மருத்துவ குழு மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, எக்ஸ்ரேபரிசோதனை போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். இதற்கான அனைத்து கருவிகள், நடமாடும் எக்ஸ்ரே வாகனம் போன்றவசதி இந்த மையத்தில் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவையான மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முழு கவச உடை அணிந்த ஓட்டுநருடன் கூடிய ஒரு வேனும் இந்த மையத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். கரோனா நோயாளிகள் வீடுகளில் இருந்து இந்த வேன் மூலம் பரிசோதனை மையத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். வீட்டில் தனிமைப்படுத்த சான்றிதழ் அளிக்கப்படும் நபர்கள் இதே வேன் மூலம் வீட்டில் கொண்டுவிடப்படுவார்கள். இதன் மூலம் கரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும் என்றார் ஆட்சியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT