Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக - குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஈரோடு, நாமக்கல், சேலத்தில் விசாரணை :

ஈரோடு

ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது.

ஈரோடு ரங்கம்பாளையத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது இரு மகன்களைக் கொடுமைப்படுத்தியதாகவும், நரபலி கொடுக்க முயற்சித்ததாகவும் பெறப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் தாய் உட்பட 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் குழந்தையை 10 லட்சத்துக்கு விற்றதாக குழந்தையின் பெற்றோரும், குழந்தையை விலைக்கு வாங்கியதாக கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சினைகளில் தலையிட்டு முதல்கட்ட விசாரணையை நடத்திய தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ், ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் இப்பிரச்சினைகள் குறித்து விசாரிக்க விசாரணை அமர்வு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தார்.

இதன் அடிப்படையில் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை அமர்வு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணை அமர்வில் ஆணையத்தின் உறுப்பினர்களாக வீ.ராமராஜ் மற்றும் மல்லிகை செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ் கூறியதாவது:

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைத்துள்ள விசாரணை அமர்வு இன்று (21-ம் தேதி) ஈரோடு மாவட்டத்திலும், நாளை (22-ம் தேதி) நாமக்கல் மாவட்டத்திலும், 23-ம் தேதி சேலம் மாவட்டத்திலும் விசாரணை நடத்துகிறது. இந்த தகவல் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் கையாளப்பட்ட விதமும், விசாரணையில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும்.

குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சரியான அறிவுறுத்தல்களை ஆணையம் வழங்கும். குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் புரிவோர் மீது ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். விசாரணை தொடர்பான விவரங்களுக்கு 94434 02285 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x