Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM
கரோனா பாதுகாப்பு விதிமுறை களைப் பின்பற்றாத 3 கடைகளை மூட ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உத்தரவிட்டார்.
ஈரோடு மாநகரப் பகுதியில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையிலான அலுவலர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஈரோடு பெரியவலசு நால்ரோடு, சூளை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகள், இறைச்சிக் கடைகள், டீ கடைகள் போன்றவற்றில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், பெரியவலசு பகுதியில் 2 பேக்கரி மற்றும் சூளையில் ஒரு பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டபோது, கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாதது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த கடைகளுக்கு தலா ரூ.5000 அபராதம்விதித்த ஆணையர், மூன்று கடைகளையும் மூட உத்தரவிட்டார். அதேபோல், முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வின் போது உதவி ஆணையர் விஜயகுமார், நகர்நல அலுவலர் முரளி சங்கர், துப்புரவு ஆய்வாளர் கண்ணன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
ரயில் நிலையத்தில் அபராதம்
ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, நேற்று முதல் ஈரோடு ரயில் நிலையத்தில், முகக்கவசம் அணியாமல் வந்த பயணிகள், ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று கலை 10 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ரயில் நிலையங்களிலும், ரயிலில் பயணிக்கும் போதும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT