Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

திருப்பூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாழை மரங்கள் சேதம் : காங்கயத்தில் அதிகபட்சம் 107 மி.மீ.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, காங்கயத்தில் 107 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.

நேற்று முன் தினம் இரவு திருப்பூரில் கனமழை பெய்தது. இதையடுத்து திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீ.): திருப்பூர் வடக்கு 54, அவிநாசி 78,பல்லடம் 34, ஊத்துக்குளி 60, காங்கயம் 107, தாராபுரம் 12, மூலனூர் 18, குண்டடம் 20, திருமூர்த்தி அணை 54, அமராவதி அணை 1, உடுமலைப்பேட்டை 10, மடத்துக்குளம் 48, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் 50, வெள்ளகோவில் 70, திருமூர்த்தி அணை (ஐ.பி) 42.4, திருப்பூர் தெற்கு 63, என மாவட்டம் முழுவதும் 721.4 மி.மீ மழை பதிவானது. சராசரியாக 45.09 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காங்கயத்தில் 107 மி.மீ. மழை பதிவானது.

திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால், ஆங்காங்கே குளம்போல தண்ணீர் தேங்கியது. திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம், திருப்பூர் மாநகராட்சி, காந்திநகர், பிச்சம்பாளையம்புதூர், புதிய பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

வாழை சேதம்

அவிநாசி அருகே போத்தம்பாளைத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில், அறுவடைக்கு தயராக இருந்த 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்அடியோடு சாய்ந்து சேதமடைந்தன. திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் பெய்த கனமழைக்கு மின்மாற்றி சாய்ந்ததால், அப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை மின் ஊழியர்கள் சரிசெய்ததும், நேற்று மின் விநியோகம் சீரானது.திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று குளம் போல தேங்கியிருந்த மழைநீர். (அடுத்தபடம்) திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் சாய்ந்த மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள். படங்கள்: இரா.கார்த்திகேயன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x