Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி : இன்று மேட்டூர், ஓமலூர், வாழப்பாடியில் முகாம்

தாரமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், போக்குவரத்து ஊழியர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

சேலம்

அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்டோருக்கு, அந்தந்த பணிமனை சார்ந்த இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

இவர்களில் அலுவலகப் பணிகளில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னர் நிர்வாக அலுவலகங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோரில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அவரவர் சார்ந்த பணிமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக, சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள எருமாபாளையம், பள்ளப்பட்டி, ஜான்சன்பேட்டை, மெய்யனூர் ஆகிய பணிமனைகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் முகாம் நடந்தது.

மேலும், நாமக்கல், தாரமங்கலம், பென்னாகரம், தருமபுரி உள்ளிட்ட பணிமனைகளிலும் தடுப்பூசி முகாம் நடந்தது. இன்று (16-ம் தேதி) மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி, ராசிபுரம் உள்ளிட்ட பணிமனைகளில் தடுப்பூசி முகாம் நடக்கவுள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறும்போது, “சேலம் கோட்டத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளிட்டோரில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 5 ஆயிரத்து 800 பேர் உள்ளனர். தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x