Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

திருப்பூர், உடுமலை பகுதிகளில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா :

திருப்பூர், உடுமலை

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில், அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருப்பூர் மாநகர் கரைதோட்டம் பகுதியில் திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாநகரச் செயலாளர் பா.மா.கருணாகரன் தலைமையிலும், வெள்ளகோவிலில் அகலரப்பாளையம் புதூரில் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஜெகநாதன் தலைமையிலும் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்,அதன் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர்மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அம்பேத்கரின் பிறந்தநாள் விழா மற்றும் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வு, அதன் மாவட்டச் செயலாளர் இரா.முகில்ராசு தலைமையில் நடந்தது.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், திருப்பூர் குமரன் நினைவகம் அருகே அம்பேத்கரின் உருவப்படத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்தனர்.

உடுமலை

உடுமலையில் உழவர் சந்தை எதிரே உள்ள அரசு கிளை நூலகம் எண் 2 சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, நூலக வாசகர் வட்டத் தலைவர் இளமுருகு தலைமையில் நடைபெற்றது. நூலகர் வீ.கணேசன் வரவேற்றார். அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கணியூர் பேரூராட்சியில்விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்(பொ) சதீஷ்குமார் தலைமையிலும், எலையமுத்தூர் பகுதியில் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவனத்தலைவர் தங்கராஜ்தலைமையிலும், தாராபுரத்தில் விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்முத்து தலைமையிலும், திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி அதன் மாவட்டச் செயலாளர் சண்முகம் தலைமையிலும், பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் எம்.பி. கார்வேந்தன் தலைமையிலும் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x