Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM
தென்னையில் வாடல் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் உதவி இயக்குநர் செயல் விளக்கம் அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி கிராமத்தில் உள்ள தென்னை மரங்களில் தஞ்சாவூர் வாடல் நோய் என்னும் சாறு வடிதல் நோய் ஏற்பட்டுள்ளது.
இந்நோயை கட்டுப் படுத்தும் முறைகள் குறித்து, பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள், அதியமான் வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு எலுமிச்சங்கிரி வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டாக்டர் சுந்தர்ராஜ் விளக்கம் அளித்தார். அப்போது, நோய் உண்டாக்கும் காரணி, அதனை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து விளக்கினார். தென்னைக்கு மருந்து கட்டும் முறை குறித்து செயல் விளக்கம் காண்பித்தார்.
இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் கூறுகையில், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை பயிரிடப் பட்டுள்ளது. வாடல் நோய் என்பது தென்னையில் 100 சதவீதம் பாதிப்பினை ஏற்படுத்தும்.
தென்னையின் எந்த ஒரு வளர்ச்சி நிலையிலும், இந்நோயின் தாக்குதல் ஏற்படலாம்.
நோயால் பாதிக்கப்பட்ட மரத்தின் தண்டு பகுதியில் இருந்து செம் பழுப்பு நிற சாறு போன்ற திரவம் வடியும். பாதிக்கப்பட்ட மரத்தின் முதிர்ந்த தென்னை ஓலைகள், மட்டைகள் வாடிப்போய் காய்ந்து தண்டோடு ஒட்டினாற் போல் தொங்கி காணப்படும். மரம் பட்டுப்போய்விடும். எனவே, நோய் பாதிக்கப்பட்ட மரத்தினை உடனே கண்டறிந்து சரியான மேலாண்மை முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடு களை வட்டார வேளாண்மை அலு வலர் பிரியா, உதவி வேளாண்மை அலுவலர் முத்துசாமி ஆகியோர் செய் திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT