Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

தமிழ்ப் புத்தாண்டையொட்டி நீண்டவரிசையில் நின்று - கோயில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் :

திருச்சி

தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று திருச்சியில் உள்ள கோயில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில்களுக்கு வந்த பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி கன்டோன்மென்ட் ஐயப்பன் கோயிலில் நேற்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டதால், கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

கரூர் மாவட்டத்தில்...

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை யொட்டி, கரூர் பசுபதீஸ்வரர் கோயில் அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு காய் கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கரோனா தொற்று அச்சம், கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜை கள் நடைபெற்றன. முன்னதாக, கோ பூஜை நடத்தப் பட்டு, சுவாமிக்கு பூ அலங்காரம், பழ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. சமூக இடைவெளியை கடை பிடித்து, முகக்கவசம் அணிந்து வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், திருமானூர் விநாயகர் கோயில், திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில், செந்துறை சிவன் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர், பால தண்டாயுதபாணி கோயில்கள், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் நேற்று அதிகாலை பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. திரளான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

செட்டிகுளம் மலை மீது அமைந்துள்ள பால தண்டாயுத பாணி கோயிலில் நேற்று சித்திரை திருநாளை முன்னிட்டு படிபூஜை விழா நடைபெற்றது. இதில், குறைந்த அளவிலான பக்தர்களே கலந்துகொண்டனர்.

காரைக்கால் மாவட்டத்தில்...

தமிழ்ப் புத்தாண்டை முன் னிட்டு, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரணாம்பிகை உட னுறை தர்பாரண்யேஸ்வரர், சனீஸ் வர பகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் பங்கேற்றனர்.

இதேபோல, காரைக்கால் அம்மையார் கோயில், கோயில் பத்து பார்வதீஸ்வரர் கோயில், பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில், தலத்தெரு மாரியம்மன் கோயில், அம்பகரத்தூர் பத்ரகாளி யம்மன் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், புத்தாண்டு சிறப்பு வழிபாடும் நடைபெற்றன.

காரைக்கால் ஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் கோயில்களுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பால், அலகு காவடிகளை சுமந்து வந்து, தரிசனம் செய்தனர்.

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில், சயன கோலத்தில் உள்ள மூலவரான ரங்கநாதப் பெருமாளுக்கு வஜ் ராங்கி அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.

ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டுமே இந்த அலங்காரம் செய்யப்படும் என்பதால், தமிழ்ப் புத்தாண்டு நாளில் பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x