Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவியருக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் 16-ம் தேதி முதல் 212 மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இத்தேர்வின் ஒரு பகுதியான கணிப்பொறியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 1 9 வகையான பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள், வரும் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடக்கிறது. இந்த செய்முறைத் தேர்வு செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 850 மாணவ, மாணவிகளுக்கு 212 மையங்களில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வை கரோனா கட்டுப்பாடுகளோடு நடத்துவது தொடர்பாக அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம், நேற்று செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயராஜ் தலைமை தாங்கினார்.
இதில், செய்முறை தேர்வு மையங்களுக்கான புறத்தேர்வாளர்கள், அகத்தேர்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, 2,100 ஆசிரியர்களுக்கான பணியாணை வழங்கப்பட்டது. கூட்டத்தில், தலைமை ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி செய்முறைத் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டனர். தேர்வு மையத்துக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தேர்வு மையத்துக்குள் நுழைவதற்கு முன், தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், சானிடைசர் அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே மையத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
இதற்காக நுழைவு வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்வு மையங்களை தினசரி தேர்வு தொடங்கும் முன்பும், முடிந்த பின்னரும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும்.
இந்த நெறிமுறைகளை கட்டாயம் அனைத்து தேர்வு மையங்களிலும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், தேர்வு மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க உள்ளனர். செய்முறைத் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியாகி உள்ளதால், திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT