Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

திருப்பூர், பொள்ளாச்சி, உதகை சட்டப்பேரவைத் தொகுதிகளில் - முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதிகட்ட தீவிர வாக்கு சேகரிப்பு :

திருப்பூர்/பொள்ளாச்சி/உதகை

திருப்பூர் நீலகிரி மாவட்டங்களிலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதிகட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய 8 சட்டப்பேரவைக் தொகுதிகள் உள்ளன.

இதில், அவிநாசியில் அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இறுதி நாளான நேற்று அவிநாசி மேற்கு ஒன்றியப் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கிய பிரச்சாரம் வெள்ளாண்டிபாளையம் பிரிவு, செங்காளிபாளையம், காந்தி நகர், கோவிந்தபுரம், பெரியகானூர், சின்ன கானூர், கானூர் புதூர், அண்ணா நகர், தண்டுக்காரம்பாளையத்தில் நிறைவடைந்தது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆதித்தமிழர் கட்சி நிறுவனர் இரா.அதியமான், அவிநாசி பகுதியில் நேற்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவிநாசி பேரூராட்சிக்கு உட்ட்ட சூளை பகுதியில் வாகன பிரச்சாரம் தொடங்கியது. முத்துசெட்டிபாளையம், பண்ணாரி மாரியம்மன் கோயில், காமராஜ் வீதி, சீனிவாசபுரம், காந்திபுரம் வழியாக அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தார்.

காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன், தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சிபி நகர், சேனாபதிபாளையம் (மேற்கு) பகுதியில் நேற்று மாலை பிரச்சாரத்தை தொடங்கியவர், வெள்ளகோவில் கடைவீதியில் நிறைவு செய்தார்.

திருப்பூர் வடக்கு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரான எம்.ரவி (இந்திய கம்யூ.) பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, திருப்பூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் நிறைவு செய்தார். திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வராஜ், தொகுதிக்கு உட்பட்ட சத்யா நகர், சுகுமார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக வேட்பாளர் சு.குணசேகரன் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து, கோட்டை மாரியம்மன் கோயில் அருகே நிறைவு செய்தார்.

பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, பல்லடம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

பாஜக மாநிலத் தலைவரும், தாராபுரம் தொகுதி வேட்பாளருமான எல்.முருகன், நேற்று காலை தொகுதிக்கு உட்பட்ட நாடார் தெருவில் தொடங்கி, நேரு நகர், பஜனை மடத்தெரு, சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, தமிழன் நகர், கீதா நகர், செட்டியார் தோட்டம், பொள்ளாச்சி சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

உடுமலை, தாராபுரம்

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி, நேற்று காலை முதல் ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணி கட்சியினர் மத்தியில் மாலையில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பை நிறைவு செய்தார்.

உடுமலை அதிமுக வேட்பாளரான அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு தாராபுரம் சாலையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தின் மூலமாக நிறைவு செய்தார்.

மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் ஆகியோர் மடத்துக்குளத்தில் தனித்தனியே தங்களது ஆதரவாளர்கள் நிரம்பிய கூட்டத்தில் வாக்கு சேகரிப்பை நிறைவு செய்தனர்.

இதேபோல 8 தொகுதிகளிலும் அதிமுக, திமுக கூட்டணி மற்றும் மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் வரதராஜன் கூட்டணிக் கட்சியினருடன், பல்லடம் சாலை சந்திப்பு பகுதியிலிருந்து பேரணியாக நகர் முழுவதும் வந்து வாக்கு சேகரித்தார். அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் ராஜாமில் சாலையில் ஊர்வலமாக வந்து புதிய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் செய்தார். ம.நீ.ம வேட்பாளர் சதீஸ்குமார், உடுமலை சாலையில் ஊர்வலமாக வந்து திருவள்ளுவர் திடலில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

இதேபோல வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி, மாசாணியம்மன் கோயில் பகுதியிலும், இ.கம்யூ., கட்சி வேட்பாளர் ஆனைமலை முக்கோணம் பகுதியிலும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரித்தனர்.

உதகை

நீலகிரி மாவட்டம் உதகையில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ், கூட்டணி கட்சியினருடன் சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து ஊர்வலமாக நகர் முழுவதும் வலம் வந்து வாக்கு சேகரித்தார். பாஜக வேட்பாளர் மு.போஜராஜனும், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து பிரச்சாரம் செய்தார்.

குன்னூரில் அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி.வினோத், திமுக வேட்பாளர் க.ராமச்சந்திரன் ஆகியோர் குன்னூர் மற்றும் கோத்தகிரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன், திமுக வேட்பாளர் எஸ்.காசிலிங்கம் ஆகியோர் கூடலூர் நகரில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x