Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
திருப்பூர் தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி பிரபா தலைமையிலான அதிகாரிகள் ஏ.பி.டி. சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, செக்யூர் வேலிங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குரிய சிறிய ரக சரக்கு வேனை பெரியசாமி (36) என்பவர் ஓட்டி வந்தார். வேனை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 44 லட்சத்து 81 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
கே.வி.ஆர்.நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக காரில் வந்த காங்கேயம் சாலை பகுதியை சேர்ந்த நாட்டுத்துரை (36) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.69,160 பறிமுதல் செய்யப்பட்டது. கணபதிபாளையத்தில் சாந்தி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், சந்திராபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (63) என்பவரிடம் இருந்த ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். காட்டுவலவு பகுதியில் மாரியப்பன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த தனபால் (38) என்பவரிடம் இருந்து ரூ.55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கணக்கம்பாளையத்தில் முத்துராமலிங்கம் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள், காந்தி நகரை சேர்ந்த சாலமன் என்பவரிடம் ரூ.68,370 பறிமுதல் செய்தனர். ராஜலட்சுமி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், வஞ்சிபாளையம் சாலையில் ஜெயச்சந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10,178 பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் ரூ.ஒரு கோடியே 50 லட்சத்து 3,208-ஐ பறிமுதல் செய்யபப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, அவிநாசி தொகுதி சேவூர் சாலை தண்ணீர்பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தண்ணீர்பந்தலில் இருந்து ஊத்துக்குளி நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 8,500 பனியன்களையும், அவிநாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே 1705 பனியன்களையும் பறிமுதல் செய்தனர்.
பல்லடம் வடுகபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு அவிநாசி மது விலக்கு போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, பல்லடம் டாஸ்மாக் கடையில் இருந்து விலைக்கு வாங்கி காரில் கொண்டு செல்லப்பட்ட 480 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக திருப்பூர் 60 அடி சாலை தெலுங்குபாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த எஸ்.சுந்தர்ராஜ் (42) உட்பட இருவரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT