Published : 04 Apr 2021 03:17 AM
Last Updated : 04 Apr 2021 03:17 AM
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.6-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இன்று (4-ம் தேதி) மாலை 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான காலம் முடிவடைகிறது. வேட் பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட யாரும் இன்றுமாலை 7 மணிக்கு பிறகு திரையரங்குகள், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் செய்வது உட்பட எவ்வித தேர்தல் பிரச்சாரமும் செய்யக்கூடாது.
மேலும், ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தக்கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு இல்லாதஅந்நிய நபர்கள் யாரும் தேவையில்லாமல் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் தங்கக்கூடாது. வாக்காளர்களுக்கு யாரும் பணமோ, பரிசுப்பொருளோ எதுவும் கொடுக்கக்கூடாது.
வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு 200 மீட்டர் சுற்றளவு எல்லைக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் யாரும் தற்காலிக பூத்கள் அமைப்பதோ, கூட்டம் கூடுவதோ, வாக்கு கேட்பதோ போன்ற எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. வாக்காளர்களை வாக்குச் சாவடி மையங்களுக்கு அரசியல் கட்சியினரோ, வேட்பாளர்களோ வாகனங்களில் ஏற்றிச்செல்வது குற்றமாகும். மீறினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று நேரில் ஆஜராகலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட துணைராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 2000-க்கும்மேற்பட்ட உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவின் போது முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுவரை விருப்பம் தெரிவிக்காத முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமிருந்தால் இன்று (4-ம் தேதி) காலை 9 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாக மைதானத்தில் நேரடியாக ஆஜராகலாம் எனத் தெரிவித்துள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT