Published : 04 Apr 2021 03:17 AM
Last Updated : 04 Apr 2021 03:17 AM
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங் களில் கடந்த 24 மணி நேரத்தில் ரூ.13 லட்சத்து 16 ஆயிரத்து 808 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பணம் கொடுக்க முயன்றதாக ஆம்பூர் திமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகாரின்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் வாக் காளர்களுக்கு பணம் கொடுப் பவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட துத்தித்தாங்கல் கிராமத்தில் வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பறக்கும் படை அலுவலர் லட்சுமிபதி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.துத்தித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (51), வீரசெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (42) ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அவர்களிட மிருந்து ரூ.21 ஆயிரத்து 880 மற்றும் திமுக தேர்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்கள், வாக்காளர் பெயர்கள் அடங்கிய குறிப்பேடு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இரண்டு பேரையும் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், திமுக சார்பில் அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, காவல் ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த எஸ்.என்.பாளையத்தில் நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் பறக்கும் படையினர் விரைந்து சென்றனர். அங்கு, திமுக வேட்பாளர் வில்வநாதனின் சகோதரர் மகன் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் மற்றும் அவரது உறவினரான பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய இருவரிடம் இருந்தும் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இருவரையும் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர்.
மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரின்பேரில் திமுக வேட்பாளர் வில்வநாதன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், கிஷோர், பிரசன்னா ஆகியோரை கைது செய்தனர்.
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் புகாரின்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு விரைந்து சென்றனர்.அப்போது, வாக்காளர் பட்டியலுடன் ரூ.54 ஆயிரத்து 700 பணம் வைத்திருந்த இருவர் சிக்கினர். அவர்கள் இருவரும் அதிமுக வேட்பாளருக்கு ஆதர வாக பணம் கொடுக்க முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திடீர் சோதனை
வேலூர் சத்துவாச்சாரி நீதிமன்றத்துக்கு அருகே பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததுடன் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் ரூ.7 லட்சத்து 83 ஆயிரத்து 513 ரொக்கம் இருந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத தால் அந்தப் பணத்தை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், வேலூர் கோட்டை பின்புறம் உள்ள ரயில்வே ‘கேட்’ அருகே பறக்கும்டை அதிகாரிகள் குழுவினர் நேற்று சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது தனியார் ஏஜென்சியில் பணிபுரிந்து வரும் ஊழியரிடம் இருந்து கணக்கில் வராமல் வைத் திருந்த ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 715 ரொக்கம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT