Published : 02 Apr 2021 03:14 AM
Last Updated : 02 Apr 2021 03:14 AM

பதற்றமான வாக்குச்சாவடிகளில் - நுண் பார்வையாளர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுரை

நாட்றாம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.

திருப்பத்தூர்

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவின் போது மிகவும் கவன முடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரி வித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கலை கல்லூரி மற்றும் நாட்றாம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி என 3 இடங்களில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வாணியம் பாடி, ஆம்பூர் தொகுதிகளில் தேர்தல் பொது பார்வையாளர் மனோஜ்கத்தாரி, ஜோலார்பேட்டை தொகுதி பொதுபார்வையாளர் மீனஜ் ஆலம், திருப்பத்தூர் தொகுதி பொதுபார்வையாளர் நீல்காந்த் ஆவாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,371 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 154 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப் பட்டுள்ளன. இந்த பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவை கண்காணிக்க தேர்தல் நுண் பார்வையாளர்களாக 171 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தேர்தல் பொது பார்வையாளர்களின் நேரடி கண்காணிப்பில் பணியாற்ற வுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், வாக்குப்பதிவு தொடங்கு வதற்கு முன்பு சுமார் 1 மணி நேரத்துக்கு முன்பாக அங்கு பணியில் இருக்க வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவுகளை கண்காணிக்க வேண்டும். அதேபோல, அங்கு நடைபெறும் அனைத்து தகவல்களையும் பொது பார்வையாளர்கள் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு செல்ல வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதையும் கண் காணிக்க வேண்டும். எந்த பிரச் சினையாக இருந்தாலும் பொது பார்வையாளர்கள் கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல வேண்டும்.

வாக்குப்பதிவின் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால். அதை அங்கேயே தீர்க்க உள்ளூர் மக்களிடம் கலந்து பேசி சுமூக முடிவுகளை எடுக்க வேண்டும். முதல் முறையாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் வாக்கு இயந்திரங்கள் குறித்தும் தெரிந்துக்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் கட்டுப் பாட்டில் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

முழு ஒத்துழைப்பு அவசியம்

வாக்குப்பதிவு நாளன்று பதிவாகும் சதவீதம் குறித்தும் அவ்வப்போது குறிப்பெடுத் துக்கொள்ள வேண்டும். தேர்தல் பொது பார்வையாளர்கள் கேட்கும்போது அங்கு நடைபெறும் வாக்குப் பதிவு சதவீதம், பிரச்சினைகளை உடனுக்கு உடன் தெரிவிக்க வேண்டும். அமைதியான தேர்தல், நியாயமான, நேர்மையான தேர்தல் நடைபெற நுண் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வந்தனாகர்க் (திருப்பத்தூர்), லட்சுமி (ஜோலார்பேட்டை), காயத்ரி சுப்பிரமணி (வாணியம்பாடி), கிருஷ்ணமூர்த்தி (ஆம்பூர்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவப்பிரகாசம், மோகன், சுமதி மற்றும் ஆனந்த கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x