Published : 29 Mar 2021 03:17 AM
Last Updated : 29 Mar 2021 03:17 AM

வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு : ஆட்சியர் முன்னிலையில் தபால் வாக்குகளை செலுத்தினர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்ற உள்ள 8,560 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. இதில், கலந்து கொண்டவர்கள் தங்களது தபால் வாக்குகளை ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. மே-2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்புடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் 4 கட்டமாக வழங்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று 5 இடங்களில் நடைபெற்றன.

வேலூர் மாவட்டத்தில் வேலூர்,காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் என 5 தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளில் மொத்தம் 1,783 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன. இதில், பணியாற்றக்கூடிய 8,560 வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவின் போது என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்து பயிற்சிகள் நேற்று வழங்கப்பட்டன.

காட்பாடி தொகுதியில் பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு காந்திநகர் டான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியிலும், வேலூர் தொகுதியில் பணியாற்ற கூடியவர்களுக்கு டி.கே.எம் மகளிர் கல்லூரியிலும், அணைக்கட்டு தொகுதியில் பணியாற்ற கூடியவர்களுக்கு ஸ்பார்க் மெட்ரிக் பள்ளியிலும், கே.வி.குப்பம் தொகுதியில் பணியாற்ற கூடியவர்களுக்கு அம்மணாங்குப்பம் கே.எம்.ஜி கல்லூரியிலும், குடியாத்தம் தொகுதியில் பணியாற்ற கூடியவர்களுக்கு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 5 இடங்களில் 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு, தேர்த லின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், மாதிரி வாக்குப்பதிவு, கரோனா தடுப்பு மற்றும் வாக்காளர்களுக்கு அளிக்கப் பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் என்ன என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்து பேசினர்.

வாக்குச்சாவடி அலுவலர்களும் தங்களுக்கான சந்தேகங்களை பயிற்சி வகுப்பிலேயே கேட்டு தெரிந்துக்கொண்டனர். இந்த பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் கூறும்போது, ‘‘தேர்தல் பயிற்சி வகுப்பு 4-கட்டமாக நடத்தப்படுகிறது. இதில், 2-கட்ட பயிற்சி வகுப்பு இதுவரை நடைபெற்றுள்ளது. எஞ்சியுள்ள பயிற்சி வகுப்பும் விரைவில் நடத்தி முடிக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகுளில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் தங்களுக்கான தபால் வாக்குகளை அந்த பயிற்சி வகுப்பு மையத்திலேயே சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக அமைக்கப்பட்ட தபால் பெட்டியில் செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், காட்பாடி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x