Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 தொகுதிகளில் 2,612 வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்பட உள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலர் (தனி) சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, 10 தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தெரிவித்ததாவது:
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில், 3,622 பிரதான வாக்குச் சாவடிகள், 1,280 துணை வாக்குச் சாவடிகள் என, 4,902 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 606 பதற்றமான வாக்குச்சாவடிகள், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிக வாக்குகள் பதிவான 15 வாக்குச் சாவடிகள் உட்பட 2,612 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப் பதிவு முழுமையாக வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.
திருவள்ளூர் உள்ளிட்ட 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 164 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், அம்பத்தூர் தொகுதியில் 23 பேர், ஆவடி, மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் தொகுதிகளில் தலா 20 பேர் போட்டியிடுகின்றனர்.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும் என்பதால், 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட 5 தொகுதிகளின் வாக்குச் சாவடிகளில் இரு வாக்குப் பதிவு இயந்திரங்களும், மற்ற 5 தொகுதிகளில் ஒரு வாக்குப் பதிவு இயந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளன.
10 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் 16,206 அரசு பணியாளர்களில், 10,600 பேர் மார்ச் 26-ம் தேதி தபால் வாக்கை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறும் பயிற்சியின்போது தபால் வாக்குகளை பதிவு செய்வர்.
தேர்தல் பணிகளில் 2,500 போலீஸார், துணை ராணுவ படையினர் 508 பேர் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT