Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM
திமுக ஆட்சியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் சமநீதி வழங்கப்பட்டது என சேலம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் திமுக வேட்பாளர்கள் ராஜேந்திரன் (சேலம் வடக்கு), சரவணன் (சேலம் தெற்கு), சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் (சேலம் மேற்கு) மற்றும் ஓமலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மோகன்குமாரமங்கலம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
சேலம் மாவட்டத்துக்கு உருக்காலை, அரசு மகளிர் கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ரூ.230 கோடியில் மேட்டூர் தனி குடிநீர் திட்டம், ரூ.183 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.36 கோடியில் திருமணிமுத்தாறு, வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி திட்டம், ஏற்காட்டில் ரூ.11 கோடியில் தாவரவியல் பூங்கா, 9 உழவர் சந்தைகள், சேலம்-ஆத்தூர் கூட்டு குடி நீர் திட்டம், ரூ.38 கோடியில் ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம், மாநகர காவல் ஆணையர் அலுவலக புதிய கட்டிடம், ரூ.150 கோடியில் புதை மின் தடம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், முடங்கி இருந்த காமலாபுரம் விமான சேவை திட்டம் தொடக்கம், ஐடி பூங்கா, மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம், சேலம் ரயில்வே கோட்டம் என எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சி அளித்ததை பெருமையாக கூறிக் கொள்கிறேன்.
முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டத்துக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார் என பட்டியலிட்டு கூற தயாரா. தான் அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றாதவர் தான் முதல்வர் பழனிசாமி. சொந்த மாவட்ட மக்களை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழக மக்களையும் ஏமாற்றியவர் தான் முதல்வர் பழனிசாமி.
தற்போது, சமூக நீதியை காப்பவராகவும், அதன் தலைவராகவும் முதல்வர் பழனிசாமி வெளிகாட்டிக் கொண்டு வருகிறார். சமூக நீதிக்காக போராடி, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தது திமுக. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கும், அருந்ததியர், இஸ்லாமிய மக்களுக்கும் இட ஒதுக்கீட்டை பெற்று கொடுத்து, அனைத்து சமுதாய மக்களுக்கும் சமநீதி வழங்கியது திமுக ஆட்சியில் என்பதை கூறிக் கொள்கிறேன்.
தேர்தல் வாக்குறுதியில் அளித்த அனைத்தையும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் செய்வேன் என உறுதிபட கூறிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT