Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி கடையநல்லூர், செங்கோட்டை நகராட்சிகள், புதூர், சாம்பவர் வடகரை, ஆய்க்குடி பேரூராட்சிகள், பூலாங்குடியிருப்பு, சொக்கம்பட்டி, போகநல்லூர், புதுக்குடி, கனகசபா பதிபேரி, பொய்கை, ஊர்மேலழகியான், கிளாங்கோடு, நயினாரகரம், இடைக்கால், பால மார்த்தாண்டபுரம், காசிதர்மம், வேலாயுதபுரம், கொடிக்குறிச்சி கிராமங்களை உள்ளடக்கியது.
முஸ்லிம்கள் அதிகம்
இந்த தொகுதியில் கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய அணைகள் உள்ளன. விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன. 1,43,484 ஆண் வாக்காளர்கள், 1,45,416 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 9 பேர் என, மொத்தம் 2,88,909 வாக்கா ளர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். தேவர், தாழ்த்தப்பட்டோர், முதலியார், யாதவர், நாடார் சமுதாயத்தினரும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்பு
மும்முனைப் போட்டி
கடையநல்லூர் தொகுதியில் 1967 முதல் 2016 வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை 2 முறை, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனன.முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் இருப்பதால், கடந்த முறை திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட முஹம்மது அபூபக்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷேக் தாவூதை 1,194 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
திமுக கூட்டணியில் மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி போட்டியிடுகிறார். திமுக வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவராக இருந்த அய்யாத்துரை பாண்டியன் தனக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாததால், திமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த அன்றே அமமுக வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப் பட்டார். நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதிமுக, அமமுக இடையே போட்டி பலமாக உள்ளது.
பலமும்- பலவீனமும்
திமுக வாக்கு வங்கியை அந்த கட்சியில் இருந்து விலகி அமமுகவில் போட்டியிடும் அய்யாத்துரை பாண்டியன் தகர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இருப்பதால் முஸ்லிம்களின் வாக்கு வங்கி இணைந்து அமமுக வாக்குகள் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.இது திமுக கூட்டணி வேட்பாளர் முஹம்மது அபூபக்கருக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக வாக்கு வங்கி அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
முஸ்லிம்கள், திமுகவின் வாக்கு வங்கி பிரிந்தால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அதிமுக கருதுகிறது. இது அவர்களுக்கு பலமாக பார்க்கப் பட்டாலும் தேவர் சமுதாய வாக்கு வங்கியை அமமுக வேட்பாளர் தகர்ப்பார் என்ற அச்சம் பலவீனமாக பார்க்கப்படுகிறது.
தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியதும் அதிமுகவுக்கு பலவீனமாகக் கருதப்படுகிறது. ஒட்டுமொத்தமாக வாக்கு வங்கிகள் சிதறுவதால் போட்டி கடுமையாக உள்ளது. இதில், யாருக்கு வெற்றி கிடக்கும் என்பது மே 2-ம் தேதி தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT