Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM

பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் - பொருட்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூரில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஸடிக்கர்களை ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.

திருப்பத்தூர்

பொதுமக்கள் தினசரி பயன் படுத்தும் பொருட்கள் மீது தேர்தல் தினத்தை நினைவூட்டும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் குடிநீர் கேன்களில் தேர்தல் நடைபெறும் நாளை நினைவூட்டும் வகையில், ‘ஸ்டிக்கர்களை’ ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று முன்தினம் தொடங்கினார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்கே நேரடியாக டோர் டெலிவரி செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், குடிநீர் கேன்களில் தேர்தல் தினத்தை குறிப்பிட்டு வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தும் ‘ஸ்டிக்கர்களை’ ஒட்டி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது, அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில், 4 தொகுதி களிலும் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர், குடிநீர் கேன்களில் தேர்தல் நடைபெறும் நாளை வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டும், அன்றைய தினம் தங்களது வாக்குரிமையை வாக்காளர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

4 தொகுதிகளிலும் தொழிலாளர் துறை மூலம் ஸ்டிக்கர்களை பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் மீது ஒட்டி தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் ரங்கராஜன், பழனி, கலைச்செல்வன், தொழி லாளர் துறை ஆய்வாளர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x