Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் - கரோனா வழிமுறைகளை கண்காணிக்க 7 குழுக்கள் அமைப்பு :

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஓராண்டாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள்வந்ததை அடுத்து ஜனவரி மாதபிற்பகுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

எனினும், முதல்கட்டமாக பிளஸ் 2 வகுப்புகள் மட்டுமே தொடங்கப்பட்டன. பின்னர் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் 9-ம் வகுப்பு தொடங்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் பள்ளி ஒன்றில் மாணவிகள் 57 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பள்ளிகளில் கரோனா தொற்றுதடுப்பு நடவடிக்கைகள் அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கரோனா தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதை உறுதிபடுத்த 7 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளிக்கு வரும்போது அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவதை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட்டு வருகின்றன. வகுப்பறைகள், உணவருந்தும் இடம், மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு, கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட யாருக்காவதுகாய்ச்சல் உள்ளிட்ட கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால், பள்ளிக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, மாவட்டகல்வி அலுவலர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், உதவி மாவட்டதிட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளி துணை ஆய்வாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர் தினமும் 10 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கரோனா தொற்று நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து வருகின்றனர். பள்ளிக்கு மாணவர்கள் வருகை சீராக உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாதிரி திருப்புத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வுக்கு குறைந்த அவகாசமே இருப்பதால், மாணவர்களும் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x