Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

தேர்தல் கட்டுப்பாடுகளால் - திருவிழாக்களுக்கு அனுமதியில்லாததால் பூக்கள் விற்பனையும், விலையும் சரிவு :

சேலம்

தேர்தல் கட்டுப்பாடுகளால் திருவிழாக்களுக்கு அனுமதியில் லாததால் பூக்களின் விற்பனையும், விலையும் சரிந்துள்ளது.

சேலம் மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் மொத்த மற்றும் சில்லரை விற்பனை மையமாக சேலம் வஉசி பூ மார்க்கெட் இருந்து வருகிறது.

சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் விளைவிக் கப்படும் பலவகையான பூக்களும் இங்கு தினந்தோறும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் சேலம் வஉசி மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

இதுதொடர்பாக பூ வியாபாரிகள் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து, கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதனால், திருவிழாக் களுக்கான பூக்கள் தேவை குறைந்துள்ளது. முகூர்த்த நாட்களும் குறைந்துள்ளது.

மார்க்கெட்டுக்கு சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. ஆனால், தேவை குறைந்துவிட்டதால், பூக்கள் விலை குறைந்ததுடன், அவற்றின் விற்பனையும் சரிந்துள்ளது.

கடந்த வாரம் சாமந்தி பூ 6 டன் விற்பனைக்கு வந்தநிலையில், தற்போது 11 டன் வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.180-க்கு விற்பனையான சாமந்தி தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல அரளிப்பூ ரூ.120-ல் இருந்து ரூ.50 ஆகவும், சம்பங்கி ரூ.200-ல் இருந்து ரூ.50 ஆகவும், குண்டு மல்லி ரூ.500-ல் இருந்து ரூ.300 ஆகவும், சன்னமல்லி ரூ.1000-ல் இருந்து ரூ.600 ஆகவும், கனகாம்பரம் ரூ.600-ல் இருந்து ரூ.240 ஆகவும் விலை குறைந்துள்ளது.

தேர்தல் கட்டுப்பாடுகள் நீங்கிய பின்னரே, விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x