Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் - அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் :

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. எனினும், செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த அக்கட்சியின் தொகுதி மகளிர் அணி பாசறை செயலாளரான மோகனசுந்தரி, திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சுப்பிரமணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். திருப்போரூர் தொகுதியின் முதல் வேட்பாளராக நாம் தமிழர் வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.

செய்யூர் தொகுதி: செய்யூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் மாநில மகளிர் அணி இணை செயலாளர் கனிதா சம்பத், வட்டாட்சியர் அலுவகத்தில் அத்தொகுதியின் தேர்தல் அலுவலர் சீதாவிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இளையராஜா ஆகியோர் செய்யூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தாம்பரம் தொகுதி: தாம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் முதலாவதாக நாம் தமிழர் வேட்பாளர் சுரேஷ்குமார் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் டி.ரவிச்சந்தரனிடம் மனு தாக்கல் செய்தார். அதேபோல் மநீம வேட்பாளர் சிவ இளங்கோ, திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, அதிமுக டி.கே.எம்.சின்னையா, அமமுக கரிகாலன் ஆகியோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

பல்லாவரம் தொகுதி: பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் இ. கருணாநிதி நேற்று பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலர் லலிதாவிடம் மனு தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் சிட்லபாக்கம் ராஜேந்திரன், மநீம சார்பில் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

செங்கல்பட்டு தொகுதி: செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சுரேஷிடம் மனு தாக்கல் செய்தார். இதே போல் சிபிஐஎம்எல் வேட்பாளர் சொ.இரணியப்பன், நாம் தமிழர் வேட்பாளர் சஞ்சீவி நாதன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதில், நாம் தமிழர் வேட்பாளர் டிராக்டரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதி: சோழிங்கநல்லூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமணனிடம் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன், நாம் தமிழர் வேட்பாளர் ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அனைத்து வேட்பாளர்களும் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் தொகுதி: காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் போட்டியிடுகிறார். அக்கட்சியின் சார்பில் மகேஷ்குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல், திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் தங்கள் வேட்புமனுக்களை காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் அலுவலர் ராஜலட்சுமியிடம் தாக்கல் செய்தனர்.

உத்திரமேரூர் தொகுதி: உத்திரமேரூர் சட்டபேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் மற்றும் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ க.சுந்தர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பெரும்புதூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ. கே.பழனி, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பெரும்புதூர் தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து அத்தொகுதியின் தேர்தல்

அலுவலர் முத்து மாதவனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x