Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் சோதனை - தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.91.63 லட்சம் பறிமுதல் :

தூத்துக்குடி

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படைகுழுக்கள்,9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே வேளாண்மைதுறை அதிகாரி சகாயமேரி தலைமையிலான தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று முன்தினம் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஒருகாரில் முறையான ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 420 பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுபோல் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயராஜ் துரைராஜ் தேவாசீர் தலைமையிலான குழுவினர் எட்டயபுரம் சாலையில் மாப்பிளையூரணி சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்து ஆயிரத்து 100 பணத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று காலை வரை நடத்தப்பட்ட சோதனையில் 25 இடங்களில் மொத்தம் ரூ.91,63,670 ரொக்கப் பணத்தையும், ரூ.41 ஆயிரம் மதிப்பிலான கட்சிக் கறை வேட்டிகள், தொப்பிகளையும் பறிமுதல் செய்தனர்.

தென்காசி

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சங்கரன்கோவிலைச் சேர்ந்த முத்துவேல் என்பவரிடம் ரூ.1,31,500 இருந்தது. இதேபோல், சங்கரன்கோவிலைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவரிடம் ரூ.57,500, குருவிகுளத்தைச் சேந்த லெட்சுமணன் என்பவரிடம் ரூ.60 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், மொத்தம் ரூ.2.49 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டாட்சியர் ஒப்புதலுடன் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x