Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM
திருப்பத்தூர் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ. 22 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்களை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
திருப்பத்தூர் அடுத்த சின்னகந்திலி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தினர். அதில், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு காவலர் உள்ளிட்ட 3 பேர் இருந்தனர். வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பாதுகாக்கப்பட்ட பெட்டியில் இருப்பது தெரியவந்தது.விசாரணையில், அந்த வாகனம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் தனியார் நகை வடிவமைப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும், இந்த நிறுவனம் தங்கத்தை மொத்தமாக கொள்முதல் செய்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது.இருப்பினும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ரூ.22 கோடி மதிப்பிலான தங்க நகைகளை, தனியார் நிறுவனம் கொண்டு செல்வதற்கான ஆவணங்களை பெற்று தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு நடத்தினர்.
அதன்பிறகு இது குறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் அங்கு வந்த வருமான வரித்துறையினர் தங்க நகைகள் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் இதர ரசீதுகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, அந்த வேன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கேட்டபோது, ரூ.22 கோடி மதிப்பிலான நகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.
அதற்கான ஆவணங்களை நகை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. இருப்பினும், நகைக்கான வருமான வரி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் கைப்பற்றப்பட்ட நகைகள் திரும்ப வழங்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT