Published : 11 Mar 2021 03:13 AM
Last Updated : 11 Mar 2021 03:13 AM

சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : கணினி குலுக்கல் முறையில் தேர்வு :

திருப்பத்தூரில் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் நேற்று ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தொகுதி வாரியாக நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளில் 5,076 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், கணினி குலுக்கல் முறையை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4 தொகுதிகளுக்கு தனித்தனியாக வழங்க ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருப்பத்தூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை யாளர்கள் சங்க கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கணினி குலுக்கலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல்படி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,240 இயந்திரங்கள் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கிலும், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,338 இயந்திரங்கள் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,258 இயந்திரங்கள் நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1,240 இயந்திரங்கள் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்' வைக்கப் பட்டன. இந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மையம் முழுமையாக கண்காணிக்கவும், அங்கு பாதுகாப்புப்பணிகளில் ஆயுதம் ஏந்திய காவலர்களை பணியமர்த்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், தேர்தல் வட்டாட்சியர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x