Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் - பிசான நெல் அறுவடைப் பணி தீவிரம் : மகசூல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி பகுதியில் இயந்திரம் மூலம் பிசான நெல் அறுவடைப் பணி நடைபெற்றது. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பருவம் தவறிய மழையால் மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனப் பகுதியில் நடப்பாண்டில் 40 ஆயிரம் ஏக்கரில்பிசான நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 38 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது.

அறுவடை தீவிரம்

தற்போது மாவட்டத்தில் பிசானநெல் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி பாசனப் பகுதிகளான குரும்பூர், ஏரல், ஆழ்வார்திருநகரி, வைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறுவடை நடைபெற்று வருகிறது.

பெரும்பாலும் இயந்திரம் மூலமே நெல் அறுவடை நடைபெறுகிறது. இதற்காக சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அறுவடை இயந்திரங்கள் வந்துள்ளன. இவற்றுக்கு மணிக்கு ரூ.2,200 வாடகை கட்டணமாக வசூலிக்கின்றனர். கடந்த ஆண்டு ரூ. 2,100 ஆக இருந்த கட்டணம் இந்த ஆண்டு சற்று உயர்ந்துள்ளது.

நடப்பாண்டு பொங்கல் பண்டிகை நேரத்தில் பெய்த பருவம்தவறிய மழை காரணமாக நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து அத்திமரப்பட்டியை சேர்ந்த விவசாயி க.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு . பொங்கல் நேரத்தில் தொடர்ச்சியாக பெய்த காலம் தவறிய மழை காரணமாக நெல் வயல்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மகசூல் குறைந் துள்ளது.

ஏக்கருக்கு 24 மூட்டை நெல், அதாவது 12 கோட்டை நெல் கிடைத்தால் அதை ஒரு மேனி என கூறுகிறோம். இந்த ஆண்டு ஒன்றரை மேனி வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஏக்கருக்கு 10 முதல் 15 மூட்டை நெல் தான் கிடைத்துள்ளது. 2 ஏக்கரில் நெல் சாகுபடி செய்த எனக்கு 18 மூட்டை நெல் தான் கிடைத்துள்ளது. மழையால் பாதிப்படையாமல் இருந்திருந்தால் 32 மூட்டை வரை கிடைத்திருக்கும். வியாபாரிகள் ஒரு கோட்டை நெல் (140 கிலோ) ரூ. 2100-க்குதான் வாங்குகின்றனர். இதனால்நெல் சாகுபடி செய்த பெரும் பாலான விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x