Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை - மோகன் சி.லாசரஸிடம் ரூ.1.20 லட்சம் பறிமுதல் :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல்நடத்தை விதிமுறை மீறல்களை கண்காணிக்க 6 தொகுதிகளிலும் மொத்தம் 18 பறக்கும் படை குழுக்கள், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 12 வீடியோகண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நத்தம் நிலவரித் திட்ட வட்டாட்சியர் நம்பிராயர் தலைமையிலான வைகுண்டம் தொகுதிக்கான நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு செய்துங்கநல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது திருநெல்வேலியில் இருந்துவந்தகாரை வழிமறித்து சோதனை செய்தனர். காரில் இருந்த மதபோதகர் மோகன் சி.லாசரஸிடம் ரூ.1.20 லட்சம் பணம் இருந்தது. ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, வைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரி- நல்லூர் விலக்கு அருகே நிலம் எடுப்பு சிறப்பு வட்டாட்சியர் நாகசுப்பிரமணியன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த காரை சோதனை செய்தனர். காரில் இருந்த தூத்துக்குடி மாவட்டம்புதுக்கோட்டை வடக்கு பகுதியைச் சேர்ந்த அமமுக பிரமுகர் பேச்சிமுத்து மற்றும் வைகுண்டம் வட்டம் இசவன்குளம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் ரூ.1,58,800 பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.7,01,190 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில்

பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையிலும், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடைபெறுகிறது.

அம்மாண்டிவிளை சந்திப்பில் நேற்றுமுன்தினம் இரவு கேரளாவில் இருந்து வந்தமீன்லாரியை பறக்கும்படை போலீஸார் சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சம்கணக்கில் வராத பணம் இருந்தது. உரியஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்கில் வராதபணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை வாகன சோதனை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x