Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 4 தொகுதிகளில் மத்திய எல்லை பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை நேற்று முன்தினம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னை வந்தடைந்த மத்திய எல்லை பாதுகாப்புப் படையினர் மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதற்கட்டமாக 96 மத்திய எல்லை பாதுகாப்புப்படையினர் வந்தடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் மத்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் இணைந்து உள்ளூர் காவல் துறையினரும் கொடி அணிவகுப்பு ஒத்திகையை நேற்று முன்தினம் நடத்தினர். திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு தலைமையில் கொடி அணிவகுப்பு ஒத்திகை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், 200-க்கும் மேற்பட்ட காவலர்கள், மத்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
அதேபோல, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் கொடி அணிவகுப்பு ஒத்திகையை வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி தொடங்கி வைத்தார்.துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்செல்வம் தலைமையில் 150 காவலர்கள், எல்லை பாது காப்புப்படை வீரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையில் கொடி அணிவகுப்பு ஒத்திகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள், எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாகவும், பதற்றமான வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்கள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT