Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
பொதுமக்கள் அச்சமின்றி கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள லாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், உடலில் பல்வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நேற்று முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ளகரோனா வார்டில், மக்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
இதுதொடர்பாக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பரமசிவன் கூறும்போது, முதல்கட்டமாக ஊசியை போட்டுக் கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-ம் கட்டமாக ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும். ஊசி போட்டுக் கொள்ள விரும்பும் மக்கள், அரசு மருத்துவமனையில், ஆதார் அல்லது ஏதாவது ஒரு ஆவணங்களுடன் சென்று, ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொண்டு, ஊசி போட்டுக் கொள்ளலாம்.
மேலும் ஊசி போட்டுக் கொண்ட பிறகு மருத்துவமனையில் அரை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
அதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென்றால் வீட்டிற்கு செல்லலாம். பொதுமக்கள் அச்சமின்றி ஊசி போட்டுக் கொள்ளலாம். தற்போது கரோனா வைரஸ் உருமாறி உள்ள தால், தடுப்பூசியை போட்டுக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும், என்றார்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 54 தனியார் மருத்துவ மனைகளில் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நாமக்கல் எர்ணாபுரம் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேல் மற்றும் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் இந்த ஊசி போட்டுக்கொண்டால் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். தன்னார்வலர்கள் இப்பணிக்கு உதவலாம், என தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 24 அரசு மையங்களிலும், 42தனியார் மருத்துவமனைகள் என 66 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடப்பட்ட முதியவர்கள், அரை மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தியும் முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.குருவ ரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான சதாசிவம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT